Wednesday, 13 February 2013

எப்படி எப்படி
எல்லாமோ
தன் பாசம்
உணர்த்துவாள் அம்மா
ஒரேயொரு
கைஅழுத்தத்தில்
எல்லாமே
உணர்த்துவார்
அப்பா...

முன்னால்
சொன்னதில்லை
பிறர் சொல்லித்தான்
கேட்டிருக்கிறேன்
என்னைப்
பற்றி பெருமையாக
அப்பா
பேசிக்கொண்டிருந்ததை...

அம்மா
எத்தனையோ முறை
திட்டினாலும்
உறைத்ததில்லை
உடனே
உறைத்திருக்கிறது
என்றேனும்
அப்பா
முகம் வாடும் போது

உன் அப்பா
எவ்வளவு உற்சாகமாக
இருக்கிறார் தெரியுமா
என என் நண்பர்கள்
என்னிடமே சொல்லும்
போதுதான் எனக்குத்
தெரிந்தது
எத்தனை பேருக்குக்
கிடைக்காத தந்தை
எனக்கு மட்டும் என...

கேட்ட உடனே
கொடுப்பதற்கு
முடியாததால் தான்
அப்பாவை அனுப்பி
இருக்கிறாரோ
கடவுள்..?

சிறுவயதில்
என் கைப்பிடித்து
நடைபயில
சொல்லிக்கொடுத்த
அப்பா
என் கரம் பிடித்து
நடந்த போது
என்ன நினைத்திருப்பார்..?

அம்மா செல்லமா
அப்பா செல்லமா
என கேட்டபோதெல்லாம்
பெருமையாகச் சொல்லி
இருக்கிறேன்
அம்மா செல்லமான
அப்பா செல்லம் என

என்ன பிடிக்கும் என் தேவதைக்கு..???????..........................

மங்கிய ஆடையோடு
ஒப்பனையற்ற முகத்தோடு,
சமையலறை நெடியோடு,
அலுக்காமல் அங்கும் இங்கும்
சுற்றிவரும்
என் வீட்டு தேவதையின்
புன்னகையில்
எங்கள் மனபாரம் குறைந்து போகும்...

அவரவர்க்கு பிடித்தம் என்ன
அது அவள் மட்டும்
அறிந்த வித்தை..
அப்பாவின் பசியறிந்து,
தங்கையின் ருசியறிந்து,
தம்பியின் குணம் அறிந்து,
எந்தன் மனமறிந்து,
நளபாகம் செய்யும் பாங்கு
அவளுக்கே வாய்த்த ஒன்று...

எனக்கு பிடிக்கும் என்பதால்
சிவப்பு நிற புடவையையும்,
தம்பிக்கு பிடிக்கும் என்று,
நெற்றியில் குங்குமமும்,
தங்கைக்கு பிடிக்கும் என்று,
தலைநிறைய மல்லிகையுமாய்
எங்கள் பிடித்தத்தை பற்றிய
அவள் இதயத்தின் பிடித்தம்
இதுவரை நான் அறிந்ததில்லை...

எனக்கு பிடிக்கும் என்று
ரோஜா செடிவளர்க்க,
தம்பிக்கு பிடிக்கும் என்று,
தொட்டி மீன்களுக்கு பெயர் வைக்க,
தங்கைக்கு பிடிக்கும் என்று,
மாலைநேர தொலைக்காட்சி நிகழ்சிகளை
தியாகம் செய்ய, என
எங்கள் விருப்பத்தை
அணு அணுவாய் ரசிக்கும்
எங்கள் குழந்தைத் தாய்க்கு
என்ன பிடிக்கும் என்று
இதுவரை நாங்கள் அறிந்ததில்லை...


என் எதிர்கால உறவிற்காய்,
உறங்காமல் கனவு காணவும்,
எங்கள் வரும் காலம்
வளமாய் மாற
அம்மனுக்கு விரதம்
இருக்கவும்,
எங்கள் செல்லச் சண்டையில்
சமாதான தூதுவனாய் மாறவும்,
பக்கத்து வீட்டுக்கு குழந்தைக்கு
பசிக்கையில் உணவூட்டவும்
எப்படி முடிக்கிறது
இவளுக்கு மட்டும்....


நாங்கள் சிரிக்கையில் சிரித்து,
அழுகையில் அழுது,
எங்கள் விருப்பத்தில் தன்
விலாசம் மறைத்த
என் தேவதைக்கு
என்ன பிடிக்கும் என்று
இதுவரைத் தெரியவில்லை
எங்களுக்கு.....

-திவ்யா சாவித்திர
என் வாழ்வு மண் மீது போனாலும்
உன் வாழ்வு இன்பங்கள் காணட்டும்
யாரோடு நீ சென்று வாழ்ந்தாலும்
வேர் போல ஆல் போல நீ வாழ்க 
அன்பே அன்பே என் இன்பம் எங்கே

பூங்காற்றே இனி போதும் என் உடல் தீண்டாதே
இங்கு போராடும் சருகான பூ மனம் தாங்காதே
நான் ஒன்று எண்ணித் தவிக்க,
தான் ஒன்று தெய்வம் நினைக்க
துன்பத்தில் என்னை தள்ளி பார்க்காதே
என் நெஞ்சம் தாங்காதே

கட்டியணைத்துக்கொள் கண்மணியே

மூச்சுமுட்ட வியர்வை சொட்ட
கண்ணை மூடி
சொப்பனம் தேடி
கூந்தல் நுனிகளை
சிந்தும் பனிகள் ஆக்கி
இறுக்கிக்கொள்
என்னை நெருக்கிக்கொள்

மிச்சமின்றி சொச்சமின்றி
மடக்கிக்கொள் -என்னை உன்னில்
அடக்கிக்கொள்
வேகங்களைப் பொறுத்து
தூரங்களை நிறுத்து
வட்டமிட்டுக் கட்டமிட்டு
ஒட்டிக்கொள்

கூச்சம் துறந்து அச்சம் மறந்து
உச்சம் கொள் -கொஞ்சல்
இச்சை கொள்
தாகங்களை மறந்து -புது
மோகங்களை உணர்ந்து
காதலுடன் காமம் பொங்க
கட்டிக்கொள்

கட்டியணைத்துக்கொள்
கண்மணியே
வேற்றுக்காரணி அந்தக்
காற்றைக்கூட
சேர்த்திடாதே நம் உடலுக்குள்
சொர்க்கம் செல்கையில்
மூச்செதற்கு?

தேவதையாய் நீயோ
தேவதையாய்
தீவதையாய் என் காதல்
தீவதையாய்

மார்கழியாய் உயிர் நீ
மார்கழியாய்
மடப்பலியாய் நானோ
மடப்பலியாய்

பூங்காற்றாய் பெண்ணே
பூங்காற்றாய்
புயல்நாற்றாய் என் மனம்
புயல்நாற்றாய்

ஓவியமாய் உன் அழகோ
ஓவியமாய்
காவியமாய் என் பாதை
காவியமாய்

நிலவில் ஒன்றாய் உன் வதனம்
நிலவில் ஒன்றாய்
இலவம் பஞ்சாய் என் கால்கள்
இலவம் பஞ்சாய்

பூம் பாவையாய் அழகோ
பூம் பாவையாய்
முட்பாதையாய் என் வாழ்வு
முட்பாதையாய்

இதற்காய் எதையும் செய்வேன்
உனக்காய்
எதற்காய் எனை வெறுத்தாய்
எதற்காய் ?

தாராளம் காட்டும் தமிழ் பெண்ணே


பாதிப் பாவாடை தமிழ் பெண்ணே
மீதியை யாரிடம் தந்தாயோ
வீட்டிலே அப்பனின் ஏழ்மையை தீர்க்க
ஆடைகட்கு விரதம் புனைந்தாயோ ?

சீதனக் கொடுமையைப் போக்கிடவே
சிக்கனச் செயல் ஒன்று கொண்டாயோ?
சீர்கெட்ட ஆடவன் ஒருவனை உளச்
சீமானாய் ஏற்றாயோ?

பாலியல் போதையில் சிக்குண்டே
நீ மாதவி ஆனாயோ?
பாதியில் கருவைப் பெற்றெடுத்தே -அதை
வீதியில் சிதைத்தாயோ?

பள்சரின் பேசரின் வேகங்கள்
உன்னைக் கண்ணகி ஆக்கிடாது
பெயார் அன்ட் லவ்லி நொடிவனப்பு தமிழ்
பெருமை சேர்த்திடாது

கண்களால் ஜாடைகள் செய்வது
உன் கற்பை உயர்த்திடாது
கற்பிழந்த பின்னர் கைபேசி மீள்நிரப்பு
கண்ணீர் துடைத்திடாது

தாராளம் காட்டும் தமிழ் பெண்ணே
ஏராளம் சொல்வேன் புத்தி
பாரதி ஆத்மா இன்னும் ஆறவில்லை
உன் தறிகெட்ட செயல் கண்டு ...!!

கயிற்றுத் தாலியை
அவள் கழுத்தில் கட்டிவிட்டு
தாலியின் காதில் சொன்னேன்
அவளை வருடாதே
என்று பொறாமையுடன்

நீ வெகுளித்தனமாய்
நனைந்து கொள்கிறாய்
உன்னை
அணு அணுவாய் ருசித்த
மழைத்துளிகளின்
வெட்கத்தை பாராமலே
...!!!

அவளை நினைத்தவாறே
கவிதை எழுதினேன்
பேனா அழுதபடி கேட்டது
ஒர் நொடி ஓய்வு

காதலி
நீ கண்ணாமூச்சியாடும்
குழந்தை
எதற்காய் என் நெஞ்சில்
விழுந்தாய்?

சிரித்தாய்
மின்சாரமாய் வதைத்தாய்
பெண்ணாய் உன்னை
உணரச் செய்தாய் -என்னை
மண்ணோடு கலக்கவிட்டாய்

கவிதையாய் அழவிட்டாய்-என்
கண்ணீரில்
விதை விட்டாய்
தென்றலாய் மாறி விட்டாய்
தீண்டினேன்
தாக்கிவிட்டாய் ..!!

என் விழியிலே
எதைக்கண்டாய் ??
கண்களைக் களவாடிச் சென்றாய்
நதிகளாய் வந்தாய்
ஏன் என் மதியினைக்
கொன்றாய்?

தனியாகச்
சிரிக்கவைத்தாய் -எனை
கூட்டத்தில் அழவைத்தாய்
மழைத்துளியாய் விழுந்தாயோ?
என் கல் மனதை
கரைத்தே சென்றாய்

போதுமடி என்னை வாழவிடு
இல்லை
உன் காலடியைக்
கட்டியணைத்தே
கண் மூடிச் சாகவிடு..!!!

கருவில் நானழுதால்
கணத்திலவள் கண்கலங்கும்
உதரம் நான் உதைத்த போது-தன்
உதிரம் தந்த உத்தமியாள்
குணம் மாறா உக்களியாள்

கண்களிலே கோபமில்லை -அவள்
பாசத்தில் பாசாங்கில்லை
நெஞ்சிலே வஞ்சமில்லை -என்னை
பிஞ்சிலே காக்கும் தெய்வக்
குணத்திற்கோ ஈடு இல்லை

மிஞ்சினால் கொஞ்சமாய்த் -தன்
அன்பிலே வஞ்சிப்பாள்
அஞ்சினால் எனைத் தூக்கி
கொஞ்சியே பயம் தீர்ப்பாள்-நிஜக்
காதலின் கருத்துரைப்பாள்

உண்மையினை வளர்த்திடுவாள்
பொய்மையினை உணர்த்திடுவாள்
காரணங்கள் சொல்லாமலே
கண்களாலே கடிந்திடுவாள்-பின்
கரத்தினால் கனியவைப்பாள்

மீசை அரும்பும் வயதில்க் கூட
அவள் பாசம் அறுந்திடாது
சம அன்பைக் காட்டிடுவாள் -தீய
சரித்திரத்தை மாற்றி வைப்பாள்
சஞ்சலமின்றிய சாதனையாள்

என் வெற்றிகளில் பெருமைப்படும்
முதல்ப் பெண் நீர்-என் தோல்வி கண்டு
சிந்திடுவீர் முதற்க் கண்ணீர்
என் ஆயுள் தரத் தயங்க மாட்டேன்
தாயே நீர் ஆண்டு நூறு வாழி!!!

பெண்ணே
எப்படி உன்னால்
மட்டும் முடிகிறது
சத்தமே இல்லாமல்
கவிதை சொல்ல....!!!

அவள் காதலால்
அடைந்த
இறப்பின் பரிசு
என் கல்லறையும்
அழகாய்
ஜொலிக்கும்
தாஜ்மஹாலாய்...!!!

பெண்மை உயிர்ப்பு

நேரிய
நெறியுணர்த்தும்-உன்
நீள் வழிப் பயணம்
புதுவழி
சொர்க்கத்தை
உன் இனம்
உணர வைக்க
பெண்ணை
உலகாள வைக்க

காலுறை களைந்த
உன் காலைப்
பாதணிகள்
நெருடுவதைப் போல்
கதியிழந்த
பெண்ணினத்தை
கயவர் உலகம்
சுரண்டுகிறது ...!!!

கருக்கு வேலிகட்கும்
கறைபடிந்த
பாதைகட்கும்
தனிவழிச் சுதந்திரம்
சீராக்கம் ..!!
இங்கு
அண்டாக்களில்
சேமிக்கப்படுகிறது கள்ளிப்பால்..!!

கால்களைப்
பந்தாடும்
கட்டெறும்புகட்கும்
கருணை காட்ட -இங்கே
ஐந்தாவது அகவையில்
அன்னை தெரேசா

பாலினச்
சுரண்டல்கள் மத்தியில்
பால்மணம் மாறாக்
கண்ணீர்ப் பயணம்
பள்ளி நோக்கி
நாளை ஓர் பெண் உயிர்ப்பாள்

பூமியாயும்
புனிதம் கேட்ட
ஆடவர் உயிர் களையும்
சாமியாயும்
சுனாமியாயும் ...!!!

//// இந்தப் புகைப்படம் யார்நகர
கிராமப் புறம் ஒன்றில் எடுக்கப் பட்டதாகும்
இந்தப் புகைப்படத்தை
பதிவாகியவர் எனது அருமை நண்பர் பத்மயன் ஆவர்
இவர் மேலும் இந்தத் துறையில் முன்னேற இறைவனை வேண்டுகின்றேன் /

முட்டை உலகம்

மூச்சு விடப் போகிறேன்
ஒரு பெருமூச்சு
நிம்மதி மூச்சு
நிஜங்களின் மூச்சு -என்
மனத் திண்மையை
மனிதர்க்குணர்தப் போகும்
மகத்தான மூச்சு...!!!

இருண்ட உலகில்
என் வெள்ளைக்
கண்ணிடைக் கருமணியைக்
கர்ப்பமாக்கி
ஒளிப் பிரசவக்
குழந்தைகளை
ஈனப்போகிறேன் ...!!!

புத்தகங்கள்
பாடங்கள் எரித்து
அனுபவம் கற்கப் போகிறேன்
மரணங்களுக்கு
வாழ்க்கை நெறி
புகுத்தப் போகிறேன்

புத்தனாக அல்ல
ஜேசுவாக அல்ல
ஜட மனிதனாக
என்னை விற்று
வாடகை உயிர் வாங்கும்
பித்தனாக...!!!

சிரிக்கப் போகிறேன்
உலகைப் பார்த்து
ஈனமாயும்
கேவலமாயும்
இடைவெளியில்லாமல்
கூச்சலிடப் போகிறேன் ....

ஒரு நொடி
ஒரே ஒரு நொடி
மனிதனாக
வாழப் போகிறேன்
சுவாச மார்க்கத்தின்
உச்ச அந்தத்திற்கும்
உயிர் கொடுத்து...
இந்த முட்டை உலகத்தில் ...!!!

தேனீக்களின்
தேவதை நீ

மிட்டாய் உலகை
ஆள்கிறாய்...!!!!

இரவுகளின் பத்தினி

இருள்
விழுங்கிக் கொப்பளித
எச்சங்களில்
மிச்சமானவள் நான் ...!!
என் இரவுகள்
பெறுமதியானவை..!!

பிரிந்தழியாப்
பொலித்தீன் பைகளால்
பூஜிக்கப்பட்டவள்
என் கறைபடிந்த
மனவாசலில்
சொர்க்கம் தேடிச்
சொக்கி நிற்போர் பலர்..!!

இன்ப ஏலக்
கருப் பொருளில்
இளமை கரைகிறது
நான் மெத்தைகளின்
சொத்தாகிப் போனேன் ...!!

இரவுகளால்
புதைக்கப்பட்டு
பகல்பொழுதில்
கண்களில் விதைக்கப்படும்
கனவுகளில் எனைக்
கண்ணகியாய் உணர்கிறேன்

உணர்ச்சியற்றவள்
முயற்சியற்றவளல்ல
நான்......
பருவமடையமுன்
பந்தாடப்பட்டவள்

முக்காடுகளுக்கு
முழுமை
விரதம் புனைந்திருக்கின்றேன்
பெண்ணென்ற
எண்ணம்
பொய்த்துப்போய்
நாளாச்சு...!!

பணம் தந்து எனக்குப்
படையலிட்டு
ஈனப் பட்டம் சுமத்தும்
ஆண்குலமே
இனியாவது
என் கல்லறையில்
எழுதிடுங்கள் -மறக்காமல்
இவள்
இரவுகளின் பத்தினி என்று...!!!

மழலை மதி

பிஞ்சு விரல்களிடை
சொக்கித்தேன்-இவள்
கொஞ்சும்
மொழிகளிடைக்
கொம்புத்தேன் ...

துள்ளிய பாதங்களிடை
எனை மறந்து
கலந்தேன்
தொடர்ந்தேன்
இவள் மின்னும்
கண்களிடை ஒளியாகிக்
கவிழ்ந்தேன்

குழந்தையும்
தெய்வமும் ஒன்றாமே
இறைவா
நீ இத்தனை அழகா?

மறந்தேன்
எனை மழலையாய்
உணர்ந்தேன்
பரிசுத்த பற்சிரிப்பில்
கறை எண்ணம்
கழுவித் தெளிந்தேன் ...!!!

புத்துயிர் கொண்டு
இவளை அணைத்தேன்
புது ஆன்மாவை
எனக்குள்
தெளித்தேன்
அமிர்தாய்த் துளித்தேன்
ஆனந்தமாய்
அழுதேன் ...!!!

கடவுளானேன்
கவிஞனானேன்
மென்மை உலகு
அழகிய கனவு
இவள்
விளையாட்டில் நான்
பொம்மையானேன்
விந்தையானேன்

தொப்புள்கொடி
உறவாய்த் துளிர்த்தது
இவள் ஜோதி
தொட்டிலிலே நிலவாய்
ஜொலித்தது
இன்னும் என்ன செய்வேன்

இவள்
பஞ்சுக் கரங்களிடைப்
பதுங்கிச்
சொர்க்கம் காண்பேன்..!!

கத்தி உயிர் ஸ்பரிசம்

என்
விலா என்பிடை
உலாப் போ-நீ
நிலா

கடல் ஆழம்
உன் மனம்
கவிதைத்
தாளம் ...!!!

சித்தன் நான்
உயிர்ப்
பித்தம் தரு
பெரு முத்தம்

நதி அசை
அழகுப் பரிசல்
பிரம்மன்
கொடைப் பரிசில்...!!

மதி உயிர்ப்புப்
புத்தி மதி
காதல்
சாணக்கியாள்...

இடைக்
கிரிவலம்
தெறிவில்
நிவாரணி க(ன்)னி

ஆகா
வார்த்தையில்
ஆளும்
யுகம்...!!!

மௌன
இனக் குவியல்
யெளவனச்
சூடெற்றச் சமையல்

பொன்நகை
வறுமை
இடைத் தேசம்
கோடை தரு
மார்கழி
மாசம் ..!!

அசை
ஆற்றின் நடை
அருவிக் கூந்தல்
நயாகரா
வண்ண உலக(ம்)க்
கனா இரா...!!

ஊசி முனை
இடைத்
தீக்காடு
மழலை உரை
குரல்
குயில்ப் பேடு...!!

நா உமிழ்
எச்சில்
தேவ அவிசு
சொற்றிடும்
உன் முன்
அழகின் பவிசு...

உயிர் உரம்
ஏற்றும்
புயல் மரம்...!!

கத்தி உயிர்
ஸ்பரிசம்
மேல் ஆடை
வழித்
தென்றல் ஆடும்
சரசம்...!!!

என் ஆபிரிக்கக் காதலி

காரிருளில்
அவள் உருவம் அறிய
வாய்ப்பில்லை
கண்ணிரண்டும்
ஒருவேளை
மின்னக்கூடும்

கோபமாயும்
கண்ணீராயும்...

பற்றைகளில்
இச்சைப்பட்டிருந்தாள்
காய்ந்த
செடிகளில்
பூத்திருந்தாள்

ஒளி உறிஞ்சிய
தோல் வழி
வடிந்த வியர்வையில்
குளித்திருந்தாள்
வறிய
முலைகளில் -மின்னிய
துளிகளாய்
ஜொலித்தாள் ..!!

என் ரசனையில்
அவள்
வறுமை இடைத்
தேசம்
எனக்கானது
அங்கே கொழுப்பிற்குப்
பஞ்சம் ...

பழுப்படைந்த அவள்
பற்களின்
கலப்படமற்ற
புன்னகைக்கு
விலை கேட்டேன்...??

சிரித்தபடி
தனக்கே விலை சொன்னாள்
தினமொரு
ரொட்டித் துண்டு
கூலிக்காய் என்
இரவுகளை நிறைப்பதாய்...!!!

மந்திர வலி உலகு (கருமை நிற அழகே!!!)

ஏ !
கருவாச்சி -உயிர்
திருகும்
உன் கண் காதல்
கருவாச்சு...!!

மழையாச்சு
துளித்...துளியாய்
பெண்மைத்
தருவாச்சு..??

மலர்
வெடிச் செடியாய்
பூத்தாச்சு
உன் கைப்பிடியில்
வேம்பும்
கரும்பாச்சு...!!

கார்மேகம்
அழகாச்சு-உன்னால்
கருப்பின் மவுசு
மலையாச்சு...!!

துரு துரு
பற்சிரிப்பில்
துருவங்கள் இணைஞ்சாச்சு
துருப்பிடிக்கா
உன் மனது
பொன்னேறு விலையாச்சு

கருங்குவளைப்
பூமேல்க் காதல்
நிலவுக்கு
வரலாச்சு ...!!!
அப்பத்தில்
மிளகைப் போல
ஒட்டிக் கொஞ்சிக்
கட்டியாச்சு ...!!

திரள் குழல்
அழகில்
தீர்த்தம் ஆடியாச்சு -உன்
கரு பெரு
கண்களால் -இதயம்
பொடியாச்சு ...!!

பிரண்டைக்
குழம்பைப் போல்
உன் சொற்கள்
உறைப்பாச்சு...
இலுப்பம் பூவாய்
மௌனம்
இனிச்சாச்சு ...!!

வரன் வேண்டா
உனதழகே கள்ளி
எனக்காச்சு
கரு நிறச்
சிலையழகே வள்ளி
நீ என்றாச்சு ..!!

மந்திர வலி
உலகு
கருமையிலே
கானக்குயில் நீயாச்சு
புன்னகை
பூரிப்பு வழி உனதாச்சு...!!!

திட்டித் தீர்க்கின்றாய்-(2)
(சலாகை உயிர்ப்பு)

திட்டித் தீர்க்கின்றாய்
செல்லம்
செல்லமாய்
செறிந்த மதுரசத்தின்
மெய்மறப்பில்
கிறங்கிப் போய் நிற்கின்றேன்

மேலும்
மேலும்
செல்லமாய்
பனிநடனம் புரிகின்றாய்
நான் உறைந்து போய்
ஏதோ
சாதிக்கத் துடிக்கும்
உன் விழி மொத்தத்திலும் -என்
சரித்திரம் தொலைக்கின்றேன்

கொஞ்சலாய்
மிஞ்சலாய்
திட்டித் தீர்க்கின்றாய்
ஏதோ மார்க்கமாய்
மெதுவாய்
உயிருக்குள்
நுழைந்திருக்கிறது
உன் வார்த்தை

சிறிய சொற்பரப்பில்
பரந்து
எரிகின்றாய்
எரிதலில் பிறந்தன
ஒட்டிய இரட்டை இதயங்கள்

மேலும் ....
மேலும் ........
திட்டித்தீர்க்கின்றாய்
செல்லமாய் ....
நான் மரத்துப் போகின்றேன்
சலாகைகளாய்....??

உன்
வார்த்தைகளின்
வெடிப்பில் மட்டும் தான்
எனக்குள்ளும்
ஓர் மௌன யுத்தம்

முஸ்லிம்
பெண்கள் முக்காடால்
முகத்தை மூடிக்கொள்வர்
நீயோ
வெட்கத்தால்
மூடிக் கொள்கிறாய்

திட்டித் தீர்க்கின்றாய்(-4-)
(திட்டல்கள் தீராது...)

திட்டித் தீர்க்கின்றாய்
ஆசையுடன்
பாசமாய்...!!

உச்ச செவிப்பறை
நாண்களை
மிச்சமின்றி அதிரச்
செய்கிறாய்

அந்தத் திட்டல்களில்
நீயும்
கொஞ்சல் அதிரசமாய்
இனிக்கிறாய்
தொடர்கிறாய்

எதிர்பாராப் பொழுதுகளில்
யாசகனுக்கு
அதிர்ஷ்டம் அடித்தால்
எப்படியிருக்கும்...!!
ம்ம்ம்.....தொடரு
உன் திட்டல்களை

வார்த்தை
முத்துக்களை விழுங்கி
சிப்பியாகிப் போகின்றன
என்
சின்னச் செவிகள்

திட்டிவிடு
திட்டிவிடு...
திட்டிக்கொண்டே
உன் அக்கறைகளை
என் மேல் கொட்டிவிடு...!!

நிறுத்தாதே
மூச்சு வெடித்து
நான் முழுமையாகிறேன்
திட்டிவிடு....!!!

நான் சுவாசித்துக்
கொண்டிருந்தேன்
உன்னை
நீ உள்ளே சென்று
பின் வெளியே வந்து
வஞ்சிக்கிறாய் என்னை ...!!!

உன் கைகளின்
ஸ்பரிசமதை
உணர்ந்த கணங்களில்
என்
நாடித் துடிப்புகளும் சொல்கின்றன
உன்னுடனே
வாழ்ந்து செத்துவிடலாமே...என்று

நீருக்கு அழகு
சலனம்
என்னவள்க்
அழகு மௌனம்

என் ஒவ்வொரு
பொழுதுகளிலும் நீ
எழுதப் பட்டிருக்கின்றாய்
நான்
உனக்கென
ஆக்கப்பட்டிருக்கின்றேன்...!!!

திட்டித் தீர்க்கின்றாய் (-6-)
(திட்டல் சுவை)

பரவசத் திட்டல்கள்
பிறக்கின்றன ...!!!

உன் திட்டல் மார்க்கம்
புனிதமானது
புதினமானது...!!
நால் வகையில் நா
இசைக்கின்றாய் ...

கொஞ்சல் திட்டல்
மிஞ்சல் திட்டல்
கோபத் திட்டல்
கண்ணால் கண்ணை
எரித்துவிடுவதைப் போல்
சபதமிட்டுத் திட்டுவாயே-அந்த
மௌனத் திட்டல் ..!!

திட்டித் தீர்க்கின்றாய்
எங்கே கற்றுக்கொண்டாய்
சொற்களால்
இதயத்தில் சுழியோட ..!!

திட்டல் சுவை பிறக்கின்றது
என்
புசிப்புகள் அடங்கி
விடவில்லை ....
எச்சில் விழுங்கல்
நின்றபாடில்லை...!!

திட்டித் தீர்க்கின்றாய்(-8-)
(எட்டாம் ஸ்வரம்)

மூச்சு வாங்கல்களில்
மௌனிக்கின்றாய்
அந்நொடி-நான்
மீண்டும் ஒரு கணம்
ஜனனிக்கின்றேன்

ரசனை மிக்க
திட்டல்கள்
காவியம் சொல்லுமா...??

எட்டாவது ஸ்வரம்
சொல்லும்
திட்டல்கள் ஒவ்வொன்றும்
தீக்குள் பிறந்த பனிச்சுவாசம்

திட்டித்தீர்க்கின்றாய்..!!
பெண்ணே
உதடுகள் சுழித்து....
ஒவ்வொரு சுழிப்பிலும்
உன்
வெட்கம் வெளிக்கின்றது

மூக்கை -நீ
கண்களுடன்
இறுக்கிக் கொண்டு
மௌனமாகும் வேளையிலே-என்
பாசம்
இறுக்கிக் கொண்டதுன்
ஆவியிலே...!!

ஸ்வரங்கள் பிறக்கின்றது
மௌனத் திட்டல்கள்
கடினமானதல்ல
கவிதையானது...!!

பனி நிலவு

தீ நிறைந்த
பகல் பொழுதில்
நெருப்பு வானில்
சொட்டுச்....
சொட்டாய்ப்...
குளிர் பொழிகின்றாய்

தளிர் வெளித்த
மலர்ச் செடிக்குள்
மகரந்தத்
துளிகளாய்
மனம் புதைக்கின்றாய்

பச்சைப் போர்வை
களைந்து
விழித்த
மொட்டுக்களாய்
இதழ் விரிக்கின்றாய்

சிறுகச்
சிறுகக் கரைந்து
நுழைந்து
என்னுள்
சர்க்கரை கானம்
இசைக்கின்றாய்

அசை தென்றலை
அணைத்துப்
பிழிந்து
முகம் துடைகின்றாய்

பகல் விழிப்பில்
உறக்கம் தந்து
பனி நிலவாய்
உறைகின்றாய் ...!!!

பிரிவுகள் மட்டும்
அடிக்கடி
புரையேற்றி விடுகின்றன
உன்னை...!!

நீ மட்டும்
இரண்டு இதயங்களை
வைத்துகொள்வது
நியாயமில்லை

ஒன்றில்
நீயாக இரு
இல்லை
நானாகி விடு
நீயும் நானுமாய்
இருக்காதே..!!

உன் சிரிப்பைப் பார்த்ததும்
தோன்றியது -இனிச்
சிரிப்புக்கும் சிலை ஒன்று
வைக்கலாமென்று ...!!!

பிரிவுகள் மட்டும்
அடிக்கடி
புரையேற்றி விடுகின்றன
உன்னை...!!

நீ மட்டும்
இரண்டு இதயங்களை
வைத்துகொள்வது
நியாயமில்லை

ஒன்றில்
நீயாக இரு
இல்லை
நானாகி விடு
நீயும் நானுமாய்
இருக்காதே..!!

நானாக்கப்பட்டிருக்கும் நீ

நீயாக்கப்பட்டிருக்கும்
ஒவ்வொரு உணர்வுகளும்
என்னை
ஈர்த்துக் கொண்டிருக்கின்றன
உனது
ஒவ்வொரு அசைவிலும்
இசைவிலும்
நானாக்கப்பட்டிருக்கின்றேன்

கடிகார முட்களிலும்
அது அலறும்
அலார ஓசையிலும்
நீயாக்கப்பட்டிருக்கின்றாய்
நேரக்கடக்கைகளில்
நான்
அதிர்வுகளைப்
புசித்தபடி மௌனிக்கின்றேன்

வாழ்வின்
ஏதோ மூலையிலும்
பயண வளைவுகளிலும்
நீயாக்கப்பட்டிருந்தாய்
வழி விடுதலிலும்
முன்னேறிப்
பின்னேறுதலிலும்
வழிப்போக்கனாகிய
அனுபவங்களுக்காய்
நான் பிரயாணப்படுகின்றேன் ...!!