Wednesday, 13 February 2013


இரவுகளின் பத்தினி

இருள்
விழுங்கிக் கொப்பளித
எச்சங்களில்
மிச்சமானவள் நான் ...!!
என் இரவுகள்
பெறுமதியானவை..!!

பிரிந்தழியாப்
பொலித்தீன் பைகளால்
பூஜிக்கப்பட்டவள்
என் கறைபடிந்த
மனவாசலில்
சொர்க்கம் தேடிச்
சொக்கி நிற்போர் பலர்..!!

இன்ப ஏலக்
கருப் பொருளில்
இளமை கரைகிறது
நான் மெத்தைகளின்
சொத்தாகிப் போனேன் ...!!

இரவுகளால்
புதைக்கப்பட்டு
பகல்பொழுதில்
கண்களில் விதைக்கப்படும்
கனவுகளில் எனைக்
கண்ணகியாய் உணர்கிறேன்

உணர்ச்சியற்றவள்
முயற்சியற்றவளல்ல
நான்......
பருவமடையமுன்
பந்தாடப்பட்டவள்

முக்காடுகளுக்கு
முழுமை
விரதம் புனைந்திருக்கின்றேன்
பெண்ணென்ற
எண்ணம்
பொய்த்துப்போய்
நாளாச்சு...!!

பணம் தந்து எனக்குப்
படையலிட்டு
ஈனப் பட்டம் சுமத்தும்
ஆண்குலமே
இனியாவது
என் கல்லறையில்
எழுதிடுங்கள் -மறக்காமல்
இவள்
இரவுகளின் பத்தினி என்று...!!!

No comments:

Post a Comment